சேதுபாவாசத்திரம்:
சேதுபாவாசத்திரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மீன்பிடி இறங்கு தளம் உள்ளது. இது பழுதடைந்த நிலையில் இருந்ததால், நவீன வசதிகளுடன் கூடிய புதிய மீன்பிடி இறங்குதளம் அமைத்து தர வேண்டும் என இந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் சட்டசபையில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலோடு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சேதுபாவாசத்திரத்தில் மீன்பிடி இறங்குதளம் ரூ.9 கோடியில் புதிதாக அமைத்து தரப்படும்
என அறிவித்தார். அதன்படி சேதுபாவாசத்திரத்தில் புதிய மீன்பிடி இறங்கு தளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழுதலைவர் முத்துமாணிக்கம், தி.மு.க. ஒன்றியச் செயலாளர்கள் அன்பழகன், இளங்கோவன் மற்றும் மீனவர் சங்க தலைவர் தாஜுதீன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெகஜோதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.