சோழவந்தான்,
சோழவந்தான் அருகே குருவித்துறை ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஊராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க வேண்டும், தெருக்களில் சாக்கடைநீர் தேங்காமல் புதியசாக்கடை அமைத்து தர வேண்டும், தெருவிளக்குகளை சரி செய்திட வேண்டும், புதிதாக கட்டிய பெண்கள் கழிப்பறையை திறந்திட வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் நடைபெறும் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஒஞ்சி தலைமை தாங்கினார். இளசு, திருவாச்சிகழுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலாளர் வேல்பாண்டி, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பொன்னுத்தாய் போராட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்கள்.
இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் வள்ளி, இன்ஸ்பெக்டர் சிவபாலன் ஆகியோர் ஊராட்சி தலைவர் ரம்யாநம்பிராஜன், துணை தலைவர் சீனிவாசன ஆகியோர் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.