தற்கொலை செய்து கொள்வதாக ரகளையில் ஈடுபட்ட விவசாயி

மாயமான மகளை மீட்டு தரக்கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் துண்டால் தனது கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொள்வதாக கூறி விவசாயி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-13 19:46 GMT
திருவாரூர்,:
மாயமான மகளை மீட்டு தரக்கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் துண்டால் தனது கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொள்வதாக கூறி விவசாயி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசில் புகார்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா லெட்சுமி நாராயணபுரத்தை சேர்ந்தவர் ஆதிமூலம்(வயது60). விவசாயி. இவருடைய மனைவி பானுமதி, மகள் பொண்ணுமணி (25) உள்ளனர். என்ஜினீயரிங் படித்துள்ள பொண்ணுமணி கடந்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதி முதல் காணவில்லை. மேலும், வீட்டில் இருந்த பவுன், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகிவற்றையும் காணவில்லை. 
இதுகுறித்து ஆதிமூலம், வடபாதிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
தற்கொலை செய்து கொள்வதாக ரகளை
இதில் மனமுடைந்த ஆதிமுலம் தனது மனைவி பானுமதியுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்து மாயமான தனது மகளை மீட்டுத் தர வேண்டும் எனவும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினார். 
பின்னர் அவர் தன்னிடம் இருந்த துண்டினால், தனது கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொள்வதாக கூறி ரகளையில் ஈடுபட்டார்.  அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆதிமூலம் மற்றும் அவரது மனைவி பானுமதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
பரபரப்பு
 விவசாயி ஒருவர் மாயமான தனது மகளை மீட்டுத் தரக்கோரி கழுத்தை துண்டால் இறுக்கி தற்கொலை செய்து கொள்வதாக ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்