அரசு பஸ் டிரைவர்களை தாக்கிய கல்லூரி மாணவர்கள்

விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டரை கல்லூரி மாணவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து போக்குவரத்து கழக ஊழியர்கள், பஸ்களை நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-13 19:42 GMT
விருதுநகர், 
விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டரை கல்லூரி மாணவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து போக்குவரத்து கழக ஊழியர்கள், பஸ்களை நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படிக்கட்டில் பயணித்த மாணவர்கள் 
விருதுநகர் அருகே உள்ள பேய்க்குளத்திலிருந்து விருதுநகருக்கு வந்த அரசு டவுன் பஸ்சில் அதிக கூட்டம் நிரம்பி வழிந்ததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர். அப்போது பஸ் கண்டக்டர் முத்துராஜா, படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணித்த மாணவர்களை பஸ்சுக்குள் ஏறி வரும் படி அறிவுறுத்தினார். பஸ்சில் இடம் இல்லாத நிலையில் மாணவர்கள் தொடர்ந்து பஸ்சில் தொங்கிக் கொண்டே வந்தனர்.  பஸ் கண்டக்டர் முத்துராஜா மற்றும் டிரைவர் ஜெயராமன் ஆகியோர் பல முறை கூறியும் மாணவர்கள் உள்ளே ஏறி வரவில்லை. அவர்கள் பதிலுக்கு பஸ்சில் இடம் இல்லாமல் எப்படி உள்ளே வரமுடியும் என கேள்வி எழுப்பினர். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. 
இதற்கிடையே இந்த பஸ் விருதுநகர் பழைய பஸ் நிலையத்துக்கு வந்ததும் பஸ்சில் தொங்கிக்கொண்டு பயணித்த மாணவர்கள் பஸ் டிரைவர் ஜெயராமன், கண்டக்டர் முத்துராஜா ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டனர். பஸ் ஊழியர்கள் இருவரும் மாணவர்களிடம் பாதுகாப்பு கருதியே பஸ்சின் உள்ளே வருமாறு அறிவுறுத்தியதாக கூறினர். 
தாக்குதல் 
இந்தநிலையில் அவர்களுக்கு இடையே தகராறு முற்றி கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் 4 பேர், பஸ் டிரைவர் ஜெயராமன் மற்றும் கண்டக்டர் முத்துராஜா ஆகிய இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு போக்குவரத்து கழக டிரைவர் பெரியகருப்பன் அவர்களை விலக்கிவிட்டு சமாதானம் செய்ய முயன்றார். அப்போது அவரும் மாணவர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
இதனை தொடர்ந்து பஸ் நிலையத்தில் இருந்த போக்குவரத்து கழக ஊழியர்கள் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
 திடீர் வேலை நிறுத்தம்
 இதற்கிடையில் சக ஊழியர்கள் தாக்கப்பட்டதை அறிந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் உடனடியாக பஸ் நிலையத்திற்கு உள்ளேயே திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பழைய பஸ் நிலையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் தனியார் பஸ்களையும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய ஊழியர்கள்  தவிக்கும் நிலை ஏற்பட்டது. 
இதுகுறித்து தகவலறிந்த விருதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தென்றல், ராஜசுலோச்சனா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சமாதானம் அடைந்து பஸ்களை இயக்க ஒப்புக் கொண்டனர். இதனை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டன. 
பஸ்கள் இயக்கப்பட்டபின் விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா பழைய பஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் போக்குவரத்துக்கழக ஊழியர்களை தாக்கியதாக கூறப்பட்ட உன்னிபட்டியைச் சேர்ந்த 3 மாணவர்கள் மற்றும் கே.உசிலம்பட்டியை சேர்ந்த மற்றொரு மாணவர் ஆகிய 4 மாணவர்களை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். மாணவர்கள் 4 பேருமே தனியார் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் ஆவர்.
மாணவர்கள் தரப்பில் போக்குவரத்து கழக ஊழியர்கள் இருவரும் தங்களை அவதூறாக பேசினர் என புகார் கூறப்பட்டதாக தெரிகிறது.
அவதி
மாணவர்களால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட முத்துராஜா, ஜெயராமன் மற்றும் பெரியகருப்பன் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காலை நேரத்தில் திடீரென பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். எனினும் காலை 9:30 மணிக்கு மேல் சகஜ நிலை திரும்பியது. பழைய பஸ்நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும் செய்திகள்