100 கிலோ அழுகிய மாம்பழங்கள் பறிமுதல்

மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் 100 கிலோ அழுகிய மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-05-13 19:24 GMT
மதுரை, 
மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 100 கிலோ அழுகிய மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். 
ஆய்வு 
மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் அவ்வப்போது அதிரடி ஆய்வுகள் நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் உள்ள ஷவர்மா கடைகளில் அதிரடி ஆய்வுகள் நடத்தப்பட்டு, சில கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 
அதன் தொடர்ச்சியாக மதுரை மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறுகையில், மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சோதனை செய்யப்பட்டது. 
பறிமுதல் 
அப்போது 20 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 100 கிலோ அழுகிய மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். எனவே, தரமான பொருட்களை மட்டுமே வியாபாரிகள் விற்பனை செய்ய வேண்டும். தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால், உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

மேலும் செய்திகள்