கருகப்பூலாம்பட்டி பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா

பொன்னமராவதி அருகே கருகப்பூலாம்பட்டி பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

Update: 2022-05-13 19:24 GMT
பொன்னமராவதி, 
பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலம் தொடங்கும் முன் விவசாய கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மீன்பிடி திருவிழா நடைபெறவில்லை. இந்தநிலையில் கருகப்பூலாம்பட்டியில் உள்ள பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கருப்பர் கோவிலில் தேங்காய் உடைத்து சாம்பிராணி காட்டி வழிபாடு செய்த பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டு வீசியவுடன் மீன்பிடி திருவிழா தொடங்கியது. கண்மாயில் கூடியிருந்த பொதுமக்கள் சாதி, மதம் பாராமல் அனைவரும் மீன் பிடிக்க தொடங்கினர். 
பாரம்பரிய முறையில் ஊத்தா, வலை, கூடை, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன்பிடிக்க தொடங்கினர். இதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. பின்னர் அந்த மீன்களை சமைத்து பொதுமக்கள் சாப்பிட்டனர். இதனால் அப்பகுதி வீடுகளில் மீன் குழம்பு வாசனை கமகமத்தது.

மேலும் செய்திகள்