சிவகங்கை நறுமண பூங்கா 2 ஆண்டுகளில் முழுமையாக செயல்படும்
சிவகங்கை நறுமண பூங்கா 2 ஆண்டுகளில் முழுமையாக செயல்படும் என்று நறுமண வாரிய செயலாளர் தெரிவித்தார்.
சிவகங்கை,
சிவகங்கை நறுமண பூங்கா 2 ஆண்டுகளில் முழுமையாக செயல்படும் என்று நறுமண வாரிய செயலாளர் தெரிவித்தார்.
தொழிற்சாலை திறப்பு
சிவகங்கையை அடுத்த முத்துபட்டியில் மத்திய அரசின் மசாலா வாரியம் மூலம் நறுமண பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த நறுமண பூங்காவில் விரிவுபடுத்தப்பட்ட மசாலா பொருட்களுக்கான செயலாக்க வசதிகள் கொண்ட தொழிற்சாலை திறப்பு விழா மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை நறுமண பூங்கா மேலாளர் போஸ் வரவேற்று பேசினார்.
மத்திய அரசின் மசாலா வாரியத்தின் செயலாளர் சத்யன் தொழிற்சாலை உற்பத்தியை தொடங்கி வைத்தார்.மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரடி விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மசாலா வாரிய செயலாளர் சத்யன் பேசியதாவது:-
8 இடங்களில்...
இந்தியாவில் சிவகங்கை உள்பட 8 இடங்களில் மசாலா வாரியத்தின் சார்பில் நறுமண பூங்கா தொடங்கப்பட்டுள்ளது.அதில் சிவகங்கை மட்டும்தான் தற்போது முழு அளவில் செயல்படாமல் உள்ளது. இந்த நறுமண பூங்காவை முழு அளவில் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்பு கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து துறையை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இந்த கமிட்டியின் மூலமாக இங்கு தொழில் தொடங்குபவர்களின் குறைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.இன்னும் 2 வருடத்திற்குள் இந்த நறுமண பூங்காவை முழுமையாக செயல்பட வேண்டும்.
தற்போது இங்கு மிளகாயை டீ பதப்படுத்தி அரைத்து ஏற்றுமதி செய்யும் வசதி மட்டும் உள்ளது. விரைவில் மஞ்சளையும் பதப்படுத்தி அரைத்து ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை தொடங்கப்படும். இது தவிர இந்த வாரியத்திற்கு சொந்தமான 40 ஏக்கர் இடம் 16 ஏற்றுமதியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் தொழில் தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்
கலந்து கொண்டவர்கள்
இதில் நறுமண பூங்கா ஆலோசகர் கண்ணன், சிவகங்கை நகரசபைத்தலைவர் துரை ஆனந்த், துணைத்தலைவர் கார்கண்ணன், மற்றும் சிவகங்கை சட்டமன்ற தொகுதி ஆலோசனைக்குழுவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன், மூத்த வக்கீல்கள் மோகனசுந்தரம், இன்பலாதன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயசிம்மா நாச்சியப்பன், முன்னாள் நகரசபை தலைவர் அர்ஜுனன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் இளங்கோவன், மற்றும் சிவகங்கை நகரைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்