வாலிபருக்கு புதிய மோட்டார் சைக்கிள் வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
பதிவு செய்ய முடியாத பழைய வகை என்ஜின் பொருத்தப்பட்ட வாகனத்துக்கு பதிலாக வாலிபருக்கு புதிய மோட்டார் சைக்கிள் வழங்க திருவாரூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டார்.
திருவாரூர்:
பதிவு செய்ய முடியாத பழைய வகை என்ஜின் பொருத்தப்பட்ட வாகனத்துக்கு பதிலாக வாலிபருக்கு புதிய மோட்டார் சைக்கிள் வழங்க திருவாரூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டார்.
நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு
திருவாரூர் மாவட்டம் கூந்தளுர் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன்(வயது30). இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி திருவாரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளார். இதற்கிடையில் கோர்ட்டில் தடை செய்யப்பட்ட பழைய வகை என்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய இயலாது என அறிவிக்கப்பட்டது.
இதனால் தனது வாகனம் பதிவு செய்ய முடியாததால் மனவேதனை அடைந்த மாதவன் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இரு தரப்பினரும் சமரசம்
நுகர்வோர் தரப்பில் வக்கீல் ராஜ்கமலும், மோட்டார் நிறுவனம் தரப்பில் வக்கீல் மணிவண்ணனும் ஆஜராகினர். இதில் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் லெட்சுமணன், பாக்கிய லட்சுமி ஆகியோர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இருதரப்பினரும் சமரசத்தை ஏற்று கொண்டனர்.
இதை தொடர்ந்து நுகர்வோர் மாதவனிடம் உள்ள பழைய மோட்டார் சைக்கிளை அந்த தனியார் நிறுவனம் பெற்று கொண்டு அதற்கு பதிலாக புதிய மோட்டார் சைக்கிளை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் எனவும், விடுபட்ட தொகையை நுகர்வோர், தனியார் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் எனவும் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு இருதரப்பினரும் ஒப்பு கொண்டனர்.
புதிய மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது
இதையடுத்து நேற்று நுகர்வோர் மாதவனுக்கு புதிய மோட்டார் சைக்கிளை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு தலைவர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் லெட்சுமணன், பாக்கியலட்சுமி முன்னிலையில் தனியார் மோட்டார் சைக்கிள் நிறுவனம் வழங்கியது.