நாகை சட்டைநாதர் கோவில் தேரோட்டம்
நாகை சட்டைநாதர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
வெளிப்பாளையம்
நாகையில் உள்ள சட்டைநாத சாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 4-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, பஞ்ச மூர்த்திகள் அபிஷேகத்துடன் தொடங்கியது. 5-ந் தேதி கொடியேற்று விழா நடைபெற்றது. அன்று இரவு சேஷ வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 11-ந் தேதி ரிஷப வாகனத்தில் சாமி, அம்பாள் எழுந்தருள ஓலை சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அமிர்தவல்லி அம்பாள் சமேத, சட்டைநாத சாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளியதும், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக தேர் வலம் வந்தது.
அப்போது பக்தர்கள் தங்கள் வீடுகளில் காத்திருந்து சாமிக்கு அர்ச்சனை செய்தனர். இரவு சட்டைநாத சாமிக்கு பஞ்சமுக அர்ச்சனை நடைபெற்றது.