துக்க வீட்டில் பந்தல் போட்ட போது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு வெள்ளிச்சந்தையில் பரிதாபம்
வெள்ளிச்சந்தையில் துக்க வீட்டில் பந்தல் போட்ட போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ராஜாக்கமங்கலம்,
வெள்ளிச்சந்தையில் துக்க வீட்டில் பந்தல் போட்ட போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
ஆசிரியை மரணம்
வெள்ளிச்சந்தை மணவிளையை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி பேபி கிரேஸ்லெட் (வயது55). இவர் சென்னையில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். பேபி கிரேஸ்லெட் உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று காலையில் சென்னையில் மரணமடைந்தார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடலை ஊருக்கு கொண்டு வந்து அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதற்காக அன்பழகன் வீட்டு முன்பு பந்தல் போடும் பணி நடந்தது. இந்த பணியில் வெள்ளமோடியை சேர்ந்த தொழிலாளி ராஜேந்திரன் (58) ஈடுபட்டிருந்தார்.
மின்சாரம் பாய்ந்தது
பந்தல் கட்டும் வேலை செய்து கொண்டிருந்த போது ராஜேந்திரன் மீது வீட்டில் உள்ள ஒயர் பட்டு மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் உடல் கருகிய நிலையில் தூக்கி வீசப்பட்டார். அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து ராஜேந்திரன் மனைவி அனிதா (45) வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துக்க வீட்டில் பந்தல் போட சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.