பரமத்தி அருகே கல்லூரி பஸ்- மோட்டார்சைக்கிள் மோதல்; விவசாயி பலி
பரமத்தி அருகே கல்லூரி பஸ்- மோட்டார்சைக்கிள் மோதல்; விவசாயி பலி;
பரமத்திவேலூர்:
பரமத்தி அருகே கல்லூரி பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.
விவசாயி
பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் அருகே உள்ள சித்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). விவசாயி. இவர் நேற்று மாலை நாமக்கல் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
பரமத்தி அருகே காரைக்கால் பகுதியில் மோட்டார்சைக்கிள் சென்றபோது, முன்னால் தனியார் கல்லூரி பஸ் ஒன்று சென்றது. அந்த சமயம் டிரைவர் இடதுபுறமாக பஸ்சை திரும்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது முருகேசன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கல்லூரி பஸ் மீது மோதியது.
விசாரணை
இதில் படுகாயம் அடைந்த முருகேசனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு முருகேசன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.