நாமக்கல்லில் கார் டிரைவர் குத்திக்கொலை

நாமக்கல்லில் கார் டிரைவர் குத்திக்கொலை

Update: 2022-05-13 18:51 GMT
நாமக்கல்:
நாமக்கல்லில் கார் டிரைவர் சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
முன்விரோதம்
நாமக்கல் எம்.ஜி.ஆர்‌. நகரை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவருடைய மகன் பிரபாகரன் (வயது 29). கார் டிரைவர். இவருக்கும், முத்துகாப்பட்டி பகுதியை சேர்ந்த மெக்கானிக் விக்னேஷ் (24) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு நாமக்கல் செல்லப்பா காலனி அருகே உள்ள மாதா கோவில் பின்புற பகுதியில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது விக்னேசை, பிரபாகரன் கத்தியால் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
17 இடங்களில் கத்திக்குத்து
இதுகுறித்து அறிந்த விக்னேஷ் தரப்பினர் சிலர் ஆயுதங்களுடன் சென்று பிரபாகரனை சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளனர். இதில் பிரபாகரனுக்கு 17 இடங்களில் கத்திக்குத்து விழுந்ததாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த பிரபாகரன் மீட்கப்பட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிரபாகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோத தகராறில் கார் டிரைவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்