இருளர் இன மக்களுக்கு 2 வாரத்தில் வீடுகள் ஒதுக்கப்படும் கலெக்டர் அமர்குஷ்வாஹா தகவல்

நாட்டறம்பள்ளி அருகே வசிக்கும் இருளர் இன மக்களுக்கு 2 வாரத்தில் வீடுகள் ஒதுக்கப்படும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

Update: 2022-05-13 18:31 GMT
ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே வசிக்கும் இருளர் இன மக்களுக்கு 2 வாரத்தில் வீடுகள் ஒதுக்கப்படும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

இருளர் இன மக்கள்

நாட்டறம்பள்ளி அருகே செட்டேரி அணை அருகே வசித்து வரும் இந்து இருளர் இனத்தை சேர்ந்த குடும்பங்களை நேற்று காலை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சந்தித்தார். அப்போது அவர்களுக்கு குடிநீர், வீடு, சாலை, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என கூறினார்.

அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரண்டு வாரத்தில் வீடு

வெலக்கல்நத்தம் அருகே செட்டேரி அணை பகுதியில் வசித்து வரும் இந்து இருளர் இனத்தைச் சேர்ந்த 9 நபர்களுக்கு பையனப்பள்ளி பகுதியில் அரசு புறம்போக்கில் வீட்டு மனை பட்டா ஏற்கனவே வழங்கப்பட்டு, தற்காலிக மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. மின் கம்பங்களை அமைத்து நிரந்தர மின் வசதி ஏற்பாடு செய்ய மின்சார துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 வாரத்திற்குள் வீடு ஒதுக்கப்பட்டு விரைவில் பணிகள் நடைபெறும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் இரண்டு நபர்களுக்கு வேலை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

வாக்காளர், குடும்ப அட்டை

மேலும் தகுதியுள்ள அனைவருக்கும் அட்டை வழங்கவும், வங்கி கணக்கு தொடங்கி, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவைகளை 3 நாட்களுக்குள் வழங்கவும்  உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார் அட்டை மட்டும் வழங்க சில நாட்கள் தாமதமாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் வெலக்கல்நத்தம் ஊராட்சியில் 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் நடைபெறும் மண் வரப்பு அமைக்கும் பணியை பார்வையிட்டு, 12-ம் வகுப்பு தேர்வு மையத்தையும் பார்வையிட்டார்.

ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, நாட்டறம்பள்ளி தாசில்தார் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், வருவாய் ஆய்வாளர் நந்தினி, வெலக்கல்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்