விழுப்புரத்தில் பந்தயத்தில் ஈடுபட்ட ஆட்டோ பறிமுதல் டிரைவர் மீது வழக்கு

விழுப்புரத்தில் பந்தயத்தில் ஈடுபட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-05-13 17:40 GMT

விழுப்புரம், 

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் காலை போலீஸ் தடையை மீறி விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் மடப்பட்டு வரை சுமார் 18 கி.மீ. தூரத்திற்கு சிலர் ஆட்டோ பந்தயம் நடத்தினர்.

 இந்த பந்தயத்தில் சென்னை வியாசர்பாடி, சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த 4 ஆட்டோக்களும், விழுப்புரத்தை சேர்ந்த ஒரு ஆட்டோவும் என மொத்தம் 5 ஆட்டோக்கள் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்து சென்றன. இந்த பந்தயம், சமூகவலைத்தளங்களில் வீடியோவாக வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் நேற்று ஆட்டோ பந்தயத்தில் கலந்துகொண்ட ஆட்டோக்களில் ஒரு ஆட்டோவை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து விழுப்புரம் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.


 தொடர்ந்து, அந்த ஆட்டோ டிரைவரான விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த பசுபதி என்பவர் மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பந்தயத்தில் ஈடுபட்ட மற்ற 4 ஆட்டோ டிரைவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்