திருப்புல்லாணியில் வாடிவாசல் அமைக்கும் பணி தொடங்கியது
திருப்புல்லாணி அருகே 50 ஆண்டுகளுக்கு பிறகு 700 காளைகள் பங்கேற்கும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதையொட்டி வாடிவாசல் அமைக்கும் பணி தொடங்கியது.;
ராமநாதபுரம்,
திருப்புல்லாணி அருகே 50 ஆண்டுகளுக்கு பிறகு 700 காளைகள் பங்கேற்கும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதையொட்டி வாடிவாசல் அமைக்கும் பணி தொடங்கியது.
ஜல்லிக்கட்டு
திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சி பொக்கனாரேந்தல் சாத்துடையார் அய்யனார்கோவில் சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ள இந்த ஜல்லிக்கட்டுக்கு வாடிவாசல் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது.
இந்த பணியை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். விழாவில் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், ராமநாதபுரம் மாவட்ட ஜல்லிக்கட்டு, எருதுகட்டு, வடமாடு உரிமையாளர்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் கூறியதாவது:- வருகிற 25-ந் தேதி இந்த பகுதியில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற உள்ளது. அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு, சக்குடி ஆகிய இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போல் திருப்புல்லாணி அருகே 50 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு விழா அரசு விதிகளை பின்பற்றி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
700 காளைகள் பங்கேற்பு
இதில் தமிழகம் முழுவதும் இருந்து 700 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். விழா நடத்த அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும், அனுமதி பெற்று தர உதவிய சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்திற்கும் கோவிலுக்கு பாத்தியப்பட்ட கிராம மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.