விற்பனைக்காக கஞ்சாவை பொட்டலம் போட்டுக்கொண்டிருந்த வாலிபர் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

சிதம்பரம் அருகே பரபரப்பு விற்பனைக்காக கஞ்சாவை பொட்டலம் போட்டுக்கொண்டிருந்த வாலிபர் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் ஒருவர் தப்பி ஓட்டம்

Update: 2022-05-13 16:45 GMT
அண்ணாமலைநகர்

சிதம்பரம் அருகே மீதிகுடி இளந்திரான் குட்டை களம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 2 மர்ம நபர்கள் சிறிய பிளாஸ்டிக் பைகளில் ஏதோ பொருளை நிரப்பி பொட்டலம் தயார் செய்துகொண்டிருந்தனர். இதைபார்த்து சந்தேகம் அடைந்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அருகில் சென்று பார்த்த போது மர்ம நபர்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை சிறிய பொட்டலமாக தயார் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே அவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். இன்னொருவர் தப்பி ஓடிவிட்டார்.  விசாரணையில் பிடிபட்ட வாலிபர் சிதம்பரம் அருகே உள்ள கந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வன்(வயது 20) என்பதும் தப்பி ஓடியவர் சிதம்பரம் அருகே உள்ள பூதங்கேணி தெற்கு தெருவை சேர்ந்த மகேஸ்வரன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து பிடிபட்ட கலைச்செல்வனை அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா, ரூ.400 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மகேஸ்வரனை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்