பெங்களூருவில் ஆசிட் வீசி விட்டு தலைமறைவு சாமியார் வேடத்தில் தியானத்தில் ஈடுபட்டவரை கர்நாடக போலீசார் மடக்கி பிடித்தனர்
பெங்களூருவில் இளம்பெண் மீது ஆசிட் வீசி விட்டு தலைமறைவானவர் திருவண்ணாமலையில் சாமியார் வேடத்தில் தியானத்தில் ஈடுபட்ட போது கர்நாடக போலீசார் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை
பெங்களூருவில் இளம்பெண் மீது ஆசிட் வீசி விட்டு தலைமறைவானவர் திருவண்ணாமலையில் சாமியார் வேடத்தில் தியானத்தில் ஈடுபட்ட போது கர்நாடக போலீசார் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆசிட் வீச்சு
கர்நாடக மாநிலம் பெங்களூரு டவுனில் உள்ள சுங்கத்கட்டே பகுதியை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 28). இவர் ஆயத்த ஆடை துணியகம் நடத்தி வந்து உள்ளார். அதே பகுதியை சேர்ந்த 24 வயதான இளம்பெண் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அந்த பெண்ணை ஒரு தலைபட்சமாக நாகேஷ் காதலித்து வந்து உள்ளார்.
அந்த பெண் வேலைபார்க்கும் அலுவலகத்திற்கு சென்றும், அவரது வீட்டிற்கு சென்றும் அடிக்கடி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நாகேஷ் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 28-ந் தேதி காலையில் நாகேஷ் அந்த தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்று மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
தலைமறைவு
அந்த சமயத்தில் தான் மறைத்து கொண்டு வந்திருந்த ஆசிட்டை நாகேஷ் இளம்பெண்ணின் முகத்தில் வீசினார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் அந்த ெபண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதற்கிடையில் நாகேஷ் அங்கிருந்து இருந்து தப்பியோடினார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். நாகேஷை பிடித்த கர்நாடக போலீசார் 4 தனிப்படையை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தனிப்படை போலீசாரின் விசாரணையில் நாகேஷ், திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் சாமியார்களுடன் சாமியாராய் காவி உடை அணிந்து சுற்றி திரிந்தது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் திருவண்ணாமலையில் கடந்த ஓரிரு தினங்களாக முகாமிட்டு நாகேஷ் குறித்து நோட்டீசு ஒட்டி தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அவர் செங்கம் சாலையில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்திற்கு சென்று வந்தது தெரியவந்தது. மேலும் போலீசார் தேடி வந்த குற்றவாளி அந்த ஆசிரமத்திற்கு அடிக்கடி தியானத்திற்கு சென்று வந்ததையும் தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.
காவி உடையில் கைது
இதையடுத்து கர்நாடக போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடிக்க திட்டம் தீட்டி நேற்று மதியத்தில் இருந்து மாறுவேடத்தில் அந்த ஆசிரமத்தின் அருகில் ரகசியமாக நின்று கண்காணித்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் மாலை சுமார் 4 மணியளவில் நாகேஷ் காவி உடைந்த அணிந்தபடி தியானத்தில் ஈடுபடுவதற்காக ஆசிரமத்திற்குள் வந்தார்.
பின்னர் அங்கு தியானத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது நாகேஷை கர்நாடக போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து கர்நாடக மாநிலத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.