துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வங்கி கணக்கில் இருந்து ரூ.2¼ லட்சம் அபேஸ்
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வங்கி கணக்கில் இருந்து ரூ.2¼ லட்சம் அபேஸ் செய்யப்பட்டது.
கரூர்
கரூர் மாவட்டம், லிங்கத்தூர் பகுதியை சேர்ந்தவர் அன்புமணி(வயது 42). இவர் கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு நம்பரில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் பேன் கார்டு பதிவு என்று ஒரு லிங்க் வந்துள்ளது. அதனை அவரது மகள் கிளிக் செய்துள்ளார். பின் அந்த லிங்கை தொடர்ந்து போலியான வங்கி பக்கம் ஒன்று வந்துள்ளது. அதில் யூசர் நேம், பாஸ்வேர்டு உள்ளிட்டவைகளை பதிவு செய்யுமாறு வந்ததையடுத்து அதையும் கிளிக் செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து அன்புமணியின் வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. பின்னர் இதுகுறித்து அன்புமணி கரூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவேணி வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடியது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.