பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில் பிரசித்தி பெற்ற பனங்காட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா, கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில், 9-ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை விநாயகர், முருகன், பனங்காட்டீஸ்வரர், மெய்யம்மை, சத்தியாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தேரோட்டம்
பின்னர், காலை 10 மணிக்கு பனங்காட்டீஸ்வரர், மெய்யம்மையுடன் சிறப்பு அலங்காரத்தில், தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து புகழேந்தி எம்.எல்.ஏ. வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்க, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மாடவீதி வழியாக கூட்டுரோட்டுக்கு வந்தது, பின்னர் அங்கிருந்து, மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது. விழாவில் ஒன்றிய குழு தலைவர் சங்கீத அரசி ரவிதுரை மற்றும் பக்தர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில், இரவில் சாமி வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. சாமிக்கான பூஜைகளை அர்ச்சகர் கணேச குருக்கள் செய்திருந்தார்.
விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையதுறை செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வாளர் பல்லவி மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.