மண்வளத்தை மேம்படுத்த வயல்களில் மேய்ச்சலுக்கு விடப்படும் மாடுகள்
மண்வளத்தை மேம்படுத்த வயல்களில் மாடுகள் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 2-ம்போக நெல் அறுவடை பணிகள் முடிந்தன. இதனால் கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சாமாண்டிபுரம், ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தரிசு நிலங்களாக உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழைக்கு தரிசு நிலங்களில் புற்கள் முளைத்து உள்ளன. இதையடுத்து கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த நாட்டு மாடுகள், தொழு மாடு வளர்ப்பவர்கள் வயல்களில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர். மாடுகளின் கழிவுகள் வயல்களுக்கு உரமாவதால் மண் வளம் மேம்படுகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.
இது குறித்து மாடு மேய்ப்பவர்கள் கூறுகையில், மாடுகளை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மேய்ச்சலுக்காக கொண்டு செல்வோம் கோடை வெயிலின் காரணமாக மலைப்பகுதியில் புற்கள் விளைச்சல் இல்லை, தற்போது கம்பம் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட வயல்கள் தரிசாக உள்ளன.வயல்களில் காணப்படும் புற்கள், வரப்புகளில் வளரும் செடி, கொடிகள் மாடுகளுக்கு தீவனமாக கிடைக்கிறது. மாடுகளின் கழிவுகள் வயல்களுக்கு இயற்கை உரமாக கிடைப்பதால் விவசாயிகள் மாடுகளை மேய்ப்பதற்கு தடைவிதிப்பதில்லை என்றனர்.