பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-13 16:26 GMT
வேலூர்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

வேலூர் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரசிங் (வயது 64). இவர்  வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் மனு அளிக்க வந்திருந்தார். அப்போது அலுவலகம் முன்பு பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் பந்தல் அருகே திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைக்க முயன்றார்.

இதைப்பார்த்த போலீசார் ஓடிச்சென்று பெட்ரோல் பாட்டிலை பறித்தனர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றி  ஆசுவாசப்படுத்தினர். மேலும், அந்த பகுதி முழுவதும் தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நகை, பணம் மோசடி

அந்த முதியவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் 32 வயது பெண்ணிடம் ரூ.60 லட்சம் மற்றும் 80 பவுன் நகைகளை கொடுத்ததாக தெரிகிறது. நகை, பணத்தை பலமுறை கேட்டும் அந்தப் பெண் கொடுக்கவில்லை. அவர் அந்த பெண்ணிடம் நகை கொடுத்தற்கான சாட்சியம் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் எந்த சாட்சியமும் இல்லாததால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். 

இதுகுறித்து நடவடிக்கை எடுத்து நகை, பணத்தை மீட்டு தரக்கோரி அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மனு அளிக்க வரும் பொதுமக்களின் உடைமைகளை சோதனை செய்து உள்ளே அனுப்ப நுழைவு வாயிலில் காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்