கொடைக்கானல் மோயர் பாயிண்டில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த காட்டெருமை சிலை

கொடைக்கானல் மோயர் பாயிண்டில் வைக்கப்பட்டுள்ள காட்டெருமை சிலை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது.

Update: 2022-05-13 15:42 GMT
கொடைக்கானல்: 
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. அதில், வனப்பகுதியில் உள்ள குணாகுகை, பில்லர்ராக், பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்தநிலையில் மாவட்ட வன அலுவலர் திலீப் ஆலோசனையின்பேரில் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் சுற்றுலா இடங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, மோயர் பாயிண்ட் பகுதியில் இரும்பு மற்றும் கான்கிரீட் கலவையால் செய்யப்பட்ட காட்டெருமை சிலை தற்போது வைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் மோயர் பாயிண்ட் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள், காட்ெடருமை சிலை முன்பாக செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர். 
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், இதுபோன்று வனவிலங்குகளின் சிலைகளை சுற்றுலா இடங்களில் பொதுமக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் வைக்க வேண்டும். மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கவும் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கொடைக்கானல் மோயர் பாயிண்டில் தற்போது வைக்கப்பட்டுள்ள காட்டெருமை சிலை போன்று வனவிலங்குகளின் சிலைகள் பல்வேறு சுற்றுலா இடங்களில் வைக்கப்பட உள்ளது. இதற்காக கேரளாவை சேர்ந்த சிற்ப கலைஞர் வரவழைக்கப்பட்டுள்ளார். அவர் மூலம் சிலைகள் வைக்கப்பட உள்ளது என்றார். 

மேலும் செய்திகள்