சில்லறை வணிக பணவீக்கத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கண்டனம்

8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சில்லறை வணிக பணவீக்கம் அதிகரித்ததற்கு தேசியவாத காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2022-05-13 15:24 GMT
கோப்பு படம்
மும்பை, 
எரிபொருள் மற்றும் சமையல் எண்ணெய் விலை உயர்வால் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் சில்லறை வணிக பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடு (சி.பி.ஐ.) அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.
இந்தநிலையில் அதிகரித்துள்ள சில்லறை வணிக பண வீக்கத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைட் க்ராஸ்டோ வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-
இந்தியாவின் சில்லறை பணவீக்கம், ரிசர்வ் வங்கி இலக்காக நிர்ணயித்த 4 சதவீதத்தை விட கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகரித்து ஏப்ரலில் 7.79 சதவீரமாக உள்ளது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும். 
2014- நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நல்ல நாட்களை கொண்டு வருவோம் என பா.ஜனதா கோஷம் எழுப்பியது. இந்த வார்த்தைகளை நாம் மறந்துவிட வேண்டும். இப்போது இந்த தோல்வியை மறைக்கவும், திசைதிருப்பவும் ஆளும் கட்சியினர் எந்த பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள் என்று தான் பார்க்கவேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்