கஞ்சா அதிரடி வேட்டையில் 36 பேர் கைது

தேனி மாவட்டத்தில் கடந்த 1½ மாதத்தில் கஞ்சா அதிரடி வேட்டையில் 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-13 15:12 GMT
தேனி: 


கஞ்சா அதிரடி வேட்டை
தமிழகம் முழுவதும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில் கஞ்சா அதிரடி வேட்டை-2' என்ற பெயரில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, தேனி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி முதல் இந்த கஞ்சா அதிரடி வேட்டை தொடங்கி நடந்து வருகிறது.

இதற்காக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேரடி மேற்பார்வையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் கஞ்சா வியாபாரிகளை கண்காணித்து, விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்து வருகின்றனர். அதுபோல், மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களின் சார்பிலும் கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மாவட்டத்தில்  இதுவரை கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தல் தொடர்பாக 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

58½ கிலோ பறிமுதல்
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 58½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சத்து 85 ஆயிரம் ஆகும். மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்டத்தில் கடந்த 1½ மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளில் கஞ்சாவை சில்லறையில் விற்பனை செய்த நபர்களே அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து தேனிக்கு கடத்தி வரும் மொத்த வியாபாரிகள் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நபர்கள் போலீசாருக்கும் போக்குகாட்டி வருகின்றனர்.

இந்த தடுப்பு நடவடிக்கை அனுபவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "ஆந்திராவில் இருந்து ஒரு கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு வாங்குகின்றனர். தேனியில் அதை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர். உதாரணத்துக்கு 200 கிலோ கஞ்சா கடத்தி வரப்படுகிறது என்றால், ஆந்திராவில் அதை ரூ.6 லட்சத்துக்கு வாங்குகின்றனர். தேனிக்கு கொண்டு வந்து விட்டால் அதன் மதிப்பு ரூ.60 லட்சத்தில் இருந்து ரூ.80 லட்சம் வரை உயர்கிறது. இதனால், கொகுசு கார்களை வாடகைக்கு எடுத்தும் சிலர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதுபோன்ற விவரங்களை சேகரித்து கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. 

கஞ்சா அதிரடி வேட்டையை தொடங்கியதால், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரும் பெரும் வியாபாரிகள் பலரும் பதுங்கிக் கொண்டனர். இதனால், ஆந்திராவில் இருந்து கடத்தி வருவதும், விற்பனையும் பெரும் அளவில் கட்டுக்குள் வந்துள்ளது. மேலும் எங்காவது பதுக்கி வைத்து விற்பனை செய்தாலும் அதையும் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

மேலும் செய்திகள்