ரெயிலில் அடிபட்டு கயிறு நிறுவன உரிமையாளர் பலி
ரெயிலில் அடிபட்டு கயிறு நிறுவன உரிமையாளர் பலியானார்.
திண்டுக்கல்:
மதுரையில் இருந்து சென்னை நோக்கி வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை புறப்பட்டது. காலை 8 மணி அளவில் இந்த ரெயில் திண்டுக்கல் ஒத்தக்கண் பாலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ரெயிலில் அடிபட்டு இறந்தது திண்டுக்கல் பிள்ளையார்நத்தம் பகுதியை சேர்ந்த கயிறு நிறுவன உரிமையாளர் குமரகுருபரன் (வயது 65) என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் குமரகுருபரனுக்கு கடன் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. எனவே அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.