ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி அபேஸ்
நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 7 பவுன் தங்க சங்கிலியை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 7 பவுன் தங்க சங்கிலியை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
7 பவுன் நகை மாயம்
குளச்சல் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது மனைவி மரியபுஷ்பம் (வயது 73). இவர்கள் தற்போது நாகர்கோவில் அருகே உள்ள மேலசூரங்குடியில் வசித்து வருகிறார்கள். மரியபுஷ்பம் நேற்று முன்தினம் சொந்த ஊரான குளச்சலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து பஸ்சில் நாகர்கோவிலுக்கு வந்தார்.
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து மேல சூரங்குடிக்கு செல்வதற்காக வேறு ஒரு பஸ்சில் ஏறினார். அந்த பஸ் புன்னை நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மரியபுஷ்பத்தின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச்சங்கிலி மாயமாகி இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பஸ் முழுவதும் தேடிப்பார்த்தார். ஆனால் நகை கிடைக்கவில்லை.
போலீசார் விசாரணை
ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி நகையை அபேஸ் செய்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
மேலும் மரிய புஷ்பம் சென்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.