தூத்துக்குடியில் ஜவுளிக்கடை உரிமையாளர் மனைவியிடம் சங்கிலி பறித்த 2பேர் கைது
தூத்துக்குடியில் ஜவுளிக்கடை உரிமையாளர் மனைவியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.;
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஜவுளிக்கடை உரிமையாளர் மனைவியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஜவுளிக்கடை
தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனி குமரன் நகரை சேர்ந்தவர் போஸ்கோ ராஜா. இவர் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சகாய சித்ரா (வயது 52). இவர் நேற்று முன்தினம் இரவு ஜவுளிக்கடைக்கு சென்று உள்ளார். பின்னர் அங்கிருந்து தனது மகளுடன் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அவர் போல்பேட்டை பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் திடீரென சகாயசித்ரா கழுத்தில் கிடந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 7¼ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்களாம்.
கைது
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த நாகூர் ஹனிபா மகன் பின்லேடன் (20) மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் ஆகிய 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்று சகாயசித்ராவிடம் தங்க சங்கிலியை பறித்து சென்றது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் பின்லேடன் உள்பட 2 பேரையும் கைது செய்தன்ர. அவர்களிடம் இருந்து தங்கசங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பின்லேடன் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.