லாரி மோதியதில் இரும்பு தூண் சாய்ந்தது
வெலிங்டன் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் லாரி மோதியதில் இரும்பு தூண் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூர்
வெலிங்டன் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் லாரி மோதியதில் இரும்பு தூண் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரெயில்வே மேம்பாலம்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வெலிங்டன் என்ற இடத்தில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் பகுதி வழியாக அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள் செல்ல முடியாது.
இதை பொருட்படுத்தாமல் அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள் செல்ல முயற்சிக்கும்போது, சிக்கிக்்கொண்டு பாலம் சேதம் அடையும் நிலை இருந்தது. குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து ராணுவ அதிகாரிகளின் பொருட்களை கொண்டு வரும் லாரிகள் சிக்கி கொள்வது உண்டு.
லாரி மோதியது
இதை தவிர்க்க ரெயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் பாதுகாப்புக்காக இரும்பு தூண்களை ரெயில்வே நிர்வாகம் வைத்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அந்த வழியாக சென்ற லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக இரும்பு தூண் மீது மோதியது.
ஆனாலும் லாரியை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டி சென்றுவிட்டார். ேமலும் லாரி மோதியதால் சேதம் அடைந்த இரும்பு தூண், சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து மாற்றம்
இதையடுத்து குன்னூரில் இருந்து ஓட்டுப்பட்டறை, அருவங்காடு ரெயில் நிலையம், பழைய அருவங்காடு வழியாக ஊட்டிக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
பின்னர் ரெயில்வே நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து, இரும்பு தூணை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும் சேதம் அடைந்த சாலை சீரமைக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த வழியே போக்குவரத்து தொடங்கியது.