அம்மன் கோவில் தேரோட்டம்

கடலூர் அருகே அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2022-05-13 14:21 GMT
கடலூர், 

கடலூர் அருகே உள்ள நாணமேட்டில் மாத்தூர் கொழுவாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் செடல் மற்றும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் திருவிழா நடத்தப்படவில்லை. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து தினசரி இரவு சாமி வீதிஉலா நடந்து வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று  காலை கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாத்தூர் கொழுவாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது நாணமேடு பகுதியில் உள்ள அனைத்து தெருக்கள் வழியாகவும் சென்று வந்தது. மேலும் விரதம் இருந்த பக்தர்கள் செடல் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் நாணமேடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவமும், நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காலை மஞ்சள் நீராட்டு உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்