வ.உ.சிதம்பரனார் குறித்த நடமாடும் புகைப்பட கண்காட்சி

திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரியில் வ.உ.சிதம்பரனார் குறித்த நடமாடும் புகைப்பட கண்காட்சியை கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-05-13 14:04 GMT
திண்டுக்கல்:
வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அறிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி வ.உ.சிதம்பரனார் குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய நடமாடும் புகைப்பட கண்காட்சி சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. குளிர்சாதன வசதி கொண்ட அரசு சொகுசு பஸ்சில் அமைக்கப்பட்ட இந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வ.உ.சிதம்பரனார் குறித்து மாணவ-மாணவிகள் அறிந்துகொள்ள வைத்த இந்த அரசு சொகுசு பஸ் இன்று திண்டுக்கல்லுக்கு வந்தது. பின்னர் திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் விசாகன் நடமாடும் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அதையடுத்து மாணவிகள் அந்த அரசு சொகுசு பஸ்சில் ஏறி அங்கு வைக்கப்பட்டிருந்த வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டனர். மேலும் கண்காட்சியை கல்லூரி முதல்வர் லட்சுமி உள்பட பலர் பார்வையிட்டனர்.
திண்டுக்கல்லில் நடந்த இந்த நடமாடும் புகைப்பட கண்காட்சி 16-ந்தேதி (திங்கட்கிழமை) நிலக்கோட்டை அரசு கலைக்கல்லூரி, வத்தலக்குண்டு பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரி ஆகியவற்றில் நடக்கிறது. பின்னர் 17-ந்தேதி பழனியாண்டவர் கலை-பண்பாட்டுக்கல்லூரியிலும், 18-ந்தேதி வேடசந்தூர் அரசு கலை-அறிவியல் கல்லூரி, சாய் பாரத் கலை-அறிவியல் கல்லூரியிலும் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட உள்ளது.


மேலும் செய்திகள்