செயல்படாத போக்குவரத்து சிக்னலால் வாகன ஓட்டிகள் அவதி

செயல்படாத போக்குவரத்து சிக்னலால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-05-13 13:23 GMT
ிருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி சந்திப்பு பகுதியில் நேற்று மதிய வேளையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து சிக்னல் செயல்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
செயல்படாத சிக்னல்
திருப்பூர் மாநகர பகுதியில் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது பெரும்பாலான இடங்களில் தானியங்கி சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சில நேரங்களில் இயங்காமல் இருக்கும் போது வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.  மாநகராட்சி சந்திப்பு பகுதி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் இந்த பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணியில் இருந்து 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சிக்னல் விளக்குகள் எரியவில்லை. இங்கு அனைத்து ரோடு சந்திப்புகளிலும் உள்ள விளக்குகள் எரியாமல் இருந்ததால் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்தனர். இங்கு ஒரு போக்குவரத்து பெண் போலீஸ்காரர் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார். ஆனாலும் போலீஸ் கூண்டு இல்லாத காரணத்தால் ரோட்டின் ஓரமாக அவர் நின்றது பல வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவரவர் விருப்பத்திற்கு சென்றதால் போக்குவரத்து தடைபட்டது.
வாகன ஓட்டிகள் அவதி
 சில நேரங்களில் புது மார்க்கெட் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, முனிசிபல் ரோடு ஆகிய 3 ரோடுகளில் இருந்தும் வாகனங்கள் எதிரும், புதிருமாக சென்றதால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடினர். மின்சாரம் தடைபட்டதால் சிக்னல் விளக்கு எரியவில்லை என தெரிகிறது. பொதுவாக மாநகராட்சி சந்திப்பு பகுதியில் அவ்வப்போது சிக்னல் மின்விளக்கு செயல்படுவதில்லை. இதனால் இந்த ரோடு வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். தொடர்ச்சியாக தானியங்கி சிக்னல் விளக்கை கவனித்து வாகனம் ஓட்டி பழகிய வாகன ஓட்டிகள் இதுபோன்ற நேரத்தில் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் சற்று கவனம் தவறினாலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதேபோல் பாதசாரிகள் ரோட்டை கடப்பதற்கும் சிரமப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி சந்திப்பு பகுதி மற்றும் மாநகரின் பிற இடங்களிலும் போக்குவரத்து சிக்னல்கள் தங்கு தடையின்றி செயல்படுவதற்கு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர். 

மேலும் செய்திகள்