சூடான டீ, காபியை பிளாஸ்டிக் பையில் பார்சல் செய்து விற்றால் கடும் நடவடிக்கை: உணவு பாதுகாப்பு அலுவலர்
தூத்துக்குடியில் சூடான டீ, காபி உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் பையில் பார்சல் செய்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் சூடான டீ, காபி உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் பையில் பார்சல் செய்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
விழிப்புணர்வு கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள டீக்கடை உரிமையாளர்களுக்கான உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் தூத்துக்குடியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், செயற்கை கலர் சேர்க்காத, முழு முகவரியுடன் உள்ள டீத்தூள் பாக்கெட்டுகள் மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும். டீ, காபி போன்ற சூடான பானங்களையும் உணவுப் பொருட்களையும் பிளாஸ்டிக் பைகளில் பொட்டலமிடக்கூடாது, அயோடின் கலந்த உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும், வடை, பஜ்ஜி போன்றவற்றை ஈக்கள் மொய்க்காதவாறும், தூசிகள் படாதவாறும் கண்ணாடி கூண்டுகளில் வைத்து விற்க வேண்டும்.
நடவடிக்கை
நுகர்வோர்களுக்கு வடை போன்ற உணவுப் பொருட்களை அச்சிட்ட நியூஸ் பேப்பரில் பார்சல் செய்யக்கூடாது, தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா மற்றும் மெல்லும் புகையிலையை விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டீ, காபி போன்ற சூடான உணவுப் பொருட்களை அனுமதியற்ற பிளாஸ்டிக் பைகளில் பார்சல் செய்தால் அபராதம் விதிப்பு உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்திமுருகன், காளிமுத்து, தூத்துக்குடி ஓட்டல்கள் சங்கத் தலைவர் செந்தில் ஆறுமுகம் மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.