குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடி சிறையில் அடைப்பு
குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடி சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி:
திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட சரித்திரபதிவேடு ரவுடி கிருபாகரன் (வயது 31). திருச்சியில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால், இதனை தடுக்கும் பொருட்டு பாலக்கரை போலீசாரால் பிணையப்பட்ட அறிக்கையின்படி அவர் நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஒரு வருட காலத்துக்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டேன், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை கிருபாகரன் தாக்கல் செய்தார். அதன்பின்பு, நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி கத்தியை காட்டி மிரட்டி பொதுமக்களிடம் பணம் வழிப்பறி செய்தல் மற்றும் பொது சொத்துக்கு பங்கம் விளைவித்தல் போன்ற செயல்களில் கிருபாகரன் ஈடுபட்டதால் அவர் மீது பாலக்கரை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மீண்டும் நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். ரவுடி கிருபாகரன் தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் குற்ற செயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர்த்து, மீதியுள்ள 332 நாட்களை சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து கிருபாகரன் உடனடியாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.