பழைய கார் பதிவை புதுப்பிக்க தவறினால் மாதம் ரூ.500 அபராதம்

பழைய கார் பதிவை புதுப்பிக்க தவறினால் மாதம் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அறிவித்துள்ளது.

Update: 2022-05-12 22:29 GMT
ஈரோடு
பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அறிவிப்பின்படி, கார்களின் பதிவை புதுப்பிப்பதற்கு ஏற்கனவே ரூ.600 மட்டுமே வசூலிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் அனைத்து 15 ஆண்டுகளான பழைய கார்களின் பதிவை புதுப்பிப்பதற்கான செலவு ரூ.5 ஆயிரத்து 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதுப்பிக்க தவறினால் மாதம் ரூ.500 வீதம் அபராதம் செலுத்தநேரிடும்.
இருசக்கர வாகனங்களின் பதிவை புதுப்பிப்பதற்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த கட்டணம் ரூ.1 ஆயிரத்து 200 ஆக அதிகரித்துள்ளது. புதுப்பிக்க தவறினால் மாதம் ரூ.300 அபராதம் செலுத்த வேண்டும். அதுபோல் இறக்குமதி செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கான மறுபதிவு கட்டணமும் ரூ.2 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.10 ஆயிரத்து 200 ஆக அதிகரித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு ரூ.15 ஆயிரத்துக்கு பதிலாக இனி ரூ.40 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தனியார் வாகனங்கள் பதிவை புதுப்பித்திருந்தாலும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.
வாகனங்களுக்கான புதுப்பித்தல் கட்டணம் மட்டுமின்றி வாகன தகுதிச் சான்றிதழுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. டாக்சிகளுக்கு ரூ.600-லிருந்து ரூ.8 ஆயிரத்து 500 ஆகவும், பஸ், லாரிகளுக்கு ரூ.1,500-லிருந்து ரூ.14 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறும்போது, ‘பதிவை புதுப்பிக்காத வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற நடைமுறைகள் விரைவில் கடுமையாக அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது' என்றார்.

மேலும் செய்திகள்