வீட்டை விட்டு மகன் துரத்தியதால் ஓய்வுபெற்ற ஆசிரியர் தர்ணா போராட்டம் மல்லூர் அருகே பரபரப்பு
மல்லூர் அருகே வீட்டை விட்டு மகன் துரத்தியதால் ஓய்வுபெற்ற ஆசிரியர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பனமரத்துப்பட்டி,
மல்லூர் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டி கிராமம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 80), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருடைய மனைவி தனலட்சுமி கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். இந்த தம்பதியினருக்கு லலிதா (51), சாந்தி (47) என்ற 2 மகள்களும், சீனிவாசன் (49) என்ற மகனும் உள்ளனர். மனைவி இறந்த பின்னர் மகனின் பராமரிப்பில் வெங்கடேசன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் மகன் சீனிவாசன் வீட்டின் முன்பு அமர்ந்து வெங்கடேசன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது வெங்கடேசன் போலீசாரிடம் கூறியதாவது:- எனது மகன் சீனிவாசனுக்கு தான் குடியிருந்து வந்த வீட்டை தான செட்டில்மென்ட் முறையில் கிரையம் செய்து கொடுத்தேன். இந்த கிைரயத்தில் நானும், எனது மனைவியும் உயிருடன் இருக்கும்வரை கீழ்தளத்தில் குடியிருந்து கொள்வது என்றும், எங்கள் இருவரின் மறைவுக்கு பிறகு சொத்து முழுவதும் மகனுக்கு சொந்தமானது என்ற அடிப்படையில் தான செட்டில்மென்ட் எழுதப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி சீனிவாசன் வீடு முழுவதும் தனக்குத்தான் சொந்தம் கீழ் தளம் மற்றும் மேல் தளத்தை யாருக்கு வேண்டுமென்றாலும் வாடகைக்கு விடுவேன் என்று கூறி என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டான்.
இதையறிந்த எனது மகள் சாந்தி மல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மீண்டும் கடந்த மாதம் போலீசார் முன்னிலையில் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டேன். இந்த நிலையில் என்னிடம் இருந்த பென்சன் தொகை ரூ.2 லட்சம் மற்றும் வீட்டு ஆவணங்களை அபகரித்து கொண்டு மீண்டும் என்னை வீட்டை விட்டு மகன் சீனிவாசன் வெளியேற்றி விட்டான். இதனால் செய்வது அறியாது வீட்டை அபகரித்து கொண்ட மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார். இதையடுத்து முதியவரை மீண்டும் வீட்டிற்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.