பயன்பாட்டுக்கு வந்த கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
ஈரோடு
கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
கூட்டு குடிநீர் திட்டம்
பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் நிலவி வந்த குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பவானி ஆற்றில் கொடிவேரி அணையை நீர் ஆதாரமாக கொண்டு கூட்டுகுடிநீர் திட்டம் வகுக்கப்பட்டது. ரூ.224 கோடி செலவில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், நல்லாம்பட்டி உள்ளிட்ட 7 பேரூராட்சிகள், 547 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும் 4 லட்சத்து 49 ஆயிரம் மக்களுக்கு தினமும் 16.40 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் இந்த பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், கொடிவேரி கூட்டுகுடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
2050-ம் ஆண்டில்...
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற காணொலி காட்சி நிகழ்ச்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ, ஊராட்சி தலைவர் நவமணி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் தொகை பெருக்கம் மற்றும் குடிநீர் தேவைக்கு ஏற்ப இந்த புதிய கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 4 லட்சத்து 49 ஆயிரம் பேருக்கு 16.40 மில்லியன் லிட்டரும், 2050-ம் ஆண்டில், 5 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு 25.40 மில்லியன் லிட்டர் வீதம் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
நீரேற்று நிலையம்
இதன் மூலம் தனி நபருக்கு நாளொன்றுக்கு ஊரகப்பகுதியில் 55 லிட்டர் வீதமும், பேரூராட்சி பகுதிகளில் 135 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்க முடியும். இந்த திட்டத்தின் கீழ் கொடிவேரி கதவணைக்கு மேலே பவானி ஆற்றங்கரையில் நீரேற்றும் நிலையத்துடன் கூடிய கிணறு அமைக்கப்பட்டு உள்ளது.
கொடிவேரி கதவணைக்கு மேல், பவானி ஆற்றங்கரையில் நீரேற்று நிலையத்துடன் கூடிய கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து 549 கிலோ மீட்டர் நீளத்துக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு சென்று, குடியிருப்புகளுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந்தேதி பணிகள் தொடங்கப்பட்டு, நேற்று திறப்பு விழா நடந்தது குறிப்பிடத்தக்கது.