கணவருடன் சேர்ந்து வாழாத மகளின் கழுத்தை அறுத்த தந்தை கைது

கணவருடன் சேர்ந்து வாழாத மகளின் கழுத்தை அறுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-12 21:26 GMT
மேச்சேரி,
மேச்சேரி அருகே உள்ள எம்.காளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49). இவருடைய மகள் சவுந்தர்யா (22). மேச்சேரி அருகே வெள்ளார் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு செல்வராஜ், தனது மகளை திருமணம் செய்து கொடுத்தார். இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக சவுந்தர்யா, தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அங்கிருந்தவாறு, மேச்சேரி அருகே உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் படித்து வந்தார். கணவருடன் சேர்ந்து வாழுமாறு அவரை அவரது தந்தை வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு மகள் மறுத்துள்ளார். 
சம்பவத்தன்று சவுந்தர்யாவிடம் தந்தை செல்வராஜ், கணவர் வீட்டுக்கு சென்று வாழுமாறு கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் நீ வாழாவெட்டியாக இருப்பதைவிட செத்து போவதே மேல் என்று கூறி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சவுந்தர்யாவின் கழுத்தை செல்வராஜ் அறுத்தார். இதில் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை உறவினர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்குப்பதிந்து செல்வராஜை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்