சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தை விஸ்வநத்தம் பகுதிக்கு இடமாற்றம் செய்யக்கூடாது என அ.தி.மு.க. கவுன்சிலர் வலியுறுத்தினார்.
சிவகாசி,
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தை விஸ்வநத்தம் பகுதிக்கு இடமாற்றம் செய்யக்கூடாது என அ.தி.மு.க. கவுன்சிலர் வலியுறுத்தினார்.
கருத்து கேட்பு
விஸ்வநத்தம் பகுதியில் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம், அண்ணாமலை - உண்ணாமலை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் வணிக வளாகம், வேலாயுதம் சாலையில் அறிவுசார் மையம் ஆகியவை கட்டுவது தொடர்பாக கருத்து கேட்கும் கூட்டம் சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நடைபெற்றது.
இதில் துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜன், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு மைதானம்
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
கவுன்சிலர் ரவிசங்கர்: ராணி அண்ணா காலனியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு அங்கு வணிக வளாகம் கட்டலாம்.
கவுன்சிலர் ஸ்ரீநிகா: மாநகராட்சி பள்ளி வளாகத்தில் வணிக வளாகம் கட்டும் திட்டத்தினை கைவிட்டு விட்டு அங்கு அறிவு சார் மையம் கட்டலாம். அப்படி இல்லை என்றால் பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைத்து தரம் உயர்த்தலாம்.
அவசியம் இல்லை
கவுன்சிலர் ராஜேஷ்: மாநகராட்சி பள்ளி மைதானத்தில் தற்போது 100-க்கும் மேற்பட்டவர்கள் காலை நேரத்தில் யாருக்கும் இடையூறு இன்றி நடைபயிற்சி செய்து வருகிறார்கள். அதனால் அந்த பகுதியில் வணிக நோக்கத்துக்கு பயன்படுத்த வேண்டாம்.
கவுன்சிலர் கரைமுருகன்: அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து வசதிகளும் உள்ளது. இதற்கு பதில் புதிய மாநகராட்சி அலுவலகம் கட்ட வேண்டிய அவசியம் இல்லை. அந்த பணத்தை கொண்டு பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்யலாம்.
டேனியல்: விஸ்வநத்தம் பகுதியில் மாநகராட்சி அலுவலகம் வருவதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் மாநகராட்சி பள்ளி விளையாட்டு மைதானத்தில் வணிக வளாகம் கட்டும் திட்டத்தினை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்.
கருத்து
இதேபோல் மண்டல தலைவர்கள் குருசாமி, சேவுகன், சூரியா, கவுன்சிலர்கள் சேதுராமன், சுதாகரன், டாக்டர் கதிரவன், ஜான்முருகேசன், மகேஸ்வரி, கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முருகன், பா.ஜ.க.முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகச்சாமி மற்றும் பலர் தங்களது கருத்துக்களை கூட்டத்தில் தெரிவித்தனர்.