தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-05-12 19:37 GMT
மரத்தை முழுமையாக அகற்ற வேண்டும்
நெல்லை மாவட்டம் பத்தமடையில் சாலை விரிவாக்கத்தின்போது மரம் முறிந்து விழுந்து 2 ேபர் இறந்தனர். தற்போது அந்த மரம் முழுமையாக அகற்றப்படாமல் எந்திரங்கள் உதவியோடு தூக்கி அதே இடத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. கனரக வாகனங்கள் ெசன்றாலோ அல்லது மழை பெய்தாலோ மரம் மீண்டும் கீழே விழும் அபாயம் உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசு பஸ்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மரத்தை முழுமையாக அகற்ற கேட்டுக்கொள்கிறேன்.
ஷேக் மதார், பத்தமடை.
ஏ.டி.எம். மையம் அமைக்கப்படுமா?
ராதாபுரம் தாலுகா விஜயாபதியில் ஏ.டி.எம். வசதி இல்லை. இதனால் அருகில் உள்ள 12 கிராம மக்கள் தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு சிரமப்படுகிறார்கள். எனவே, விஜயாபதியில் ஏ.டி.எம். வசதி அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.  
ஆபத்தான பள்ளம் 
சமூகரெங்கபுரம் தெற்கூர் காலனி மெயின் தெருவுக்குள் செல்லும் இடத்தில் கழிவுநீர் தொட்டிக்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், பல மாதங்கள் ஆகியும் இந்த ஆபத்தான பள்ளம் மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.
அந்தோணி சுப்பையா, சமூகரெங்கபுரம்.
சுகாதாரக்கேடு
சுத்தமல்லி குடிசை மாற்று வாரிய பகுதியில் கடந்த சில மாதங்களாக கழிவுநீர், பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கியது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதால், பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ரவி, சுத்தமல்லி.
குட்டைபோல் தேங்கி கிடக்கும் தண்ணீர்
மானூர் தாலுகா வடக்கு அச்சம்பட்டி பஞ்சாயத்து கீழத்தெருவில் அடிப்படை வசதி இல்லை. இதனால் அங்குள்ள குடிநீர் குழாய் அருகில் தண்ணீர் குட்டை போல் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக நோய் பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். அந்த பகுதியில் அடிப்படை வசதிகளை சரிசெய்து, தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமல்ராஜ், வடக்கு அச்சம்பட்டி.
வேகத்தடை வேண்டும்
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் மந்தியூர் பஞ்சாயத்து வாகைகுளம் சாலையில் ஆபத்தான வளைவு உள்ளது. இந்த வளைவு இருபகுதியிலும் வேகத்தடை இருந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. இதனால் அங்கு இருந்த வேகத்தடை அகற்றப்பட்டது. தற்போது, வாகனங்கள் அந்த வழியாக வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி அந்த வளைவு பகுதியில் இருபுறமும் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
அம்ஜத், முதலியாா்பட்டி.
பஸ் முறையாக இயக்கப்படுமா?
நெல்லையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திற்கு தடம் எண் 137 ஏ அரசு பஸ் தினமும் 6 முறை இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் குரும்பூர், நாலுமாவடி, இடையன்விளை, செங்குடி, பூச்சிக்காடு, நாதன்கிணறு, கந்தசாமிபுரம், அம்மாள்புரம், குமாரசாமிபுரம், காயாமொழி, முருகேசபுரம், பரமன்குறிச்சி, வெள்ளாளன்விளை, நயினார்புரம், தண்டுப்பத்து, தைக்காவூர், உடன்குடி ஆகிய ஊர்கள் வழியாக இயக்கப்பட்டது. ஆனால், கடந்த ஓராண்டாக இந்த பஸ் 2 முறை மட்டுமே இயக்கப்படுகிறது. மற்ற 4 முறையும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இதனால் மேற்கண்ட கிராம மக்கள் கடுமையாக அவதிப்படுகிறார்கள். எனவே, இந்த பஸ்சை முறையாக இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
பொன்ராஜ். பூச்சிக்காடு.
மீண்டும் பஸ்சை இயக்க வேண்டும்
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் இருந்து நெல்லைக்கு தடம் எண் 136 அரசு பஸ் தினமும் காலை 5 மணிக்கு இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் அந்த பஸ் நிறுத்தப்பட்டது. தற்போது, கொரோனா குறைந்து பல்வேறு பகுதிகளில் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால்,, ஆத்தூரில் இருந்து காலை நேரத்தில் புறப்படும் பஸ் மட்டும் இயக்கப்படவில்லை. இதனால் அந்த பஸ்சை நம்பி இருக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்படுகிறார்கள். ஆகவே, மீண்டும் அதிகாலை நேரத்தில் அந்த பஸ்சை இயக்கினால் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
செந்தில், ஆத்தூர்.

மேலும் செய்திகள்