அம்மாபாளையத்தில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க கோரிக்கை
அம்மாபாளையத்தில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் கூட்டம் மாநில துணைத்தலைவர் பெரியசாமி தலைமையில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் கோசிபா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெரம்பலூரில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்களை தடுக்க அம்மாபாளையத்தில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். பெரம்பலூர் பழைய பஸ்நிலையம், காமராஜர் சிக்னல் சாலை, மகளிர் போலீஸ் நிலைய சாலை, புதிய பஸ்நிலைய நுழைவு வாயில், தினசரி மார்க்கெட் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, தபால் அலுவலக தெரு மற்றும் குறுக்கு தெருக்களில் பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். வேப்பூர், வேப்பந்தட்டை, குரும்பலூரில் உள்ள அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு அந்த வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட செயலாளர் சிவகுமார் வரவேற்றார். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி நன்றி கூறினார்.