ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி அதிகாிப்பு

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

Update: 2022-05-12 18:20 GMT
பென்னாகரம்:
நீர்வரத்து அதிகரிப்பு
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. மேலும் அசானி புயல் காரணமாக ஒகேனக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுககு நீர்வரத்து அதிகரித்தும் குறைந்தும் காணப்படுகிறது.
 இதனிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல், கேரட்டி, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்
இந்த நிலையில் இன்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர். இதனிடையே நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த பயணிகள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்