மருதாந்தலையில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 25 பேர் காயம் வீரர்கள் பரிசுகளை அள்ளிச்சென்றனர்
மருதாந்தலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 25 பேர் காயமடைந்தனர். வீரர்கள் பரிசுகளை அள்ளிச்சென்றனர்.
அன்னவாசல்:
ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டையை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலை அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதி கிராமத்தினர் முடிவு செய்தனர். அதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அதற்கான பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவபரிசோதனை நடைபெற்றது. ஜல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வருவாய் கோட்டாச்சியர் குழந்தைசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
850 காளைகள் சீறிப்பாய்ந்தன
தொடர்ந்து வாடிவாசலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதையடுத்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறிபாய்ந்த காளைகளில் பல காளைகள் மின்னல் வேகத்தில் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின.
இருப்பினும் பல காளைகளை 210 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 850 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
25 பேர் காயம்
காளைகள் முட்டி தள்ளியதில் மதன்குமர் (வயது 20), சிதம்பரம் (52), கிருஷ்ணன் (55), நாகராஜ் (22), சுரேஷ் (38), மனோஜ்குமார் (21) உள்ளிட்ட வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டு உரிமையாளர்கள் உள்பட 25 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் செல்லத்துரை (38), விக்கி (23) உள்ளிட்ட 8 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பரிசு பொருட்கள்
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், மின்விசிறி, டேபிள்பேன், குக்கர், ஹாட்பாக்ஸ், சில்வர் அண்டா, கிரைண்டர், மிக்சி, பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த பரிசுகளை வீரர்கள், மாட்டு உரிமையாளர்கள் அள்ளிச்சென்றனர்.
பாதுகாப்பு
ஜல்லிக்கட்டை இலுப்பூர் தாசில்தார் முத்துக்கருப்பன் மற்றும் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.
ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழிஅரசு தலைமையில் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உள்ளிட்ட 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிகட்டுக்கான ஏற்பாடுகளை மருதாந்தலை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
பரிசு பொருட்கள் வழங்குவதில் தாமதத்தால் வாக்குவாதம்
ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் 2 லாரிமுழுவதும் பல்வேறு பரிசுகள் ஏற்றிவரப்பட்டு விழா குழுவினரால் வழங்கப்பட்டது. அப்போது பரிசு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் மாட்டின் உரிமையாளருக்கும், பரிசு வழங்கும் விழா கமிட்டியாளர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காளையின் உரிமையாளர் ஒருவர் பரிசு பொருட்களை தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் சமாதானம் செய்து அவருக்கு மற்று பரிசு பொருளை வழங்கி பிரச்சினையை சரிசெய்தனர். இதனால் சிறிதுநேரம் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டது.
கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளை
ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட சீரங்கம்பட்டியை சேர்ந்த மணி என்பவரது ஜல்லிக்கட்டு காளை ஒன்று ஜல்லிக்கட்டு திடலில் இருந்து அருகாமையிலிருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதனையடுத்து தகவறிந்த அன்னவாசல் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீசன் தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி ஜல்லிக்கட்டு காளையை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.