ஒருபுறம் வீணாகும் குடிநீர்; மறுபுறம் குடங்களுடன் காத்திருக்கும் பெண்கள்

பாம்பன் ரோடு பாலத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. முதுகுளத்தூர் பகுதியில் குடிநீருக்காக பெண்கள் குடத்துடன் காத்து கிடக்கிறார்கள்.

Update: 2022-05-12 18:02 GMT
முதுகுளத்தூர்,

பாம்பன் ரோடு பாலத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. முதுகுளத்தூர் பகுதியில் குடிநீருக்காக பெண்கள் குடத்துடன் காத்து கிடக்கிறார்கள்.

குடிநீர் பிரச்சினை

ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை வானம் பார்த்த பூமி என்று தான் சொல்ல வேண்டும். மாவட்டத்தில் சாயல்குடி, நரிப்பையூர், கடுகு சந்தை, சிக்கல், ஏர்வாடி, இதம்பாடல், திருஉத்தரகோசமங்கை தேரிருவேலி, முதுகுளத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான ஊர்களில் குடிதண்ணீர் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மக்களின் குடிதண்ணீர் பிரச்சினை தீர்ப்பதற்காகவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஓரளவு மக்களின் குடிதண்ணீர் பிரச்சினை தீர்க்கப்பட்டாலும் முழுமையாக குடி தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை என்று சொல்லலாம்.

வீணாகும் குடிநீர்

 மாவட்டத்தின் பெரும்பாலான ஊர்களில் மக்கள் இன்று வரையிலும் குடிதண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு குடங்களை தள்ளுவண்டிகளில் வைத்தும் சைக்கிளில் வைத்தும் தலையில் சுமந்தபடி தான் நடந்து சென்று வருகிறார்கள்.
மாவட்டத்தில் குடிதண்ணீருக்காக மக்கள் அதிகமாக கஷ்டப்பட்டு வரும் நிலை ஒருபுறம் இருக்க மறுபுறம் ராமேசுவரம் தீவு பகுதி மக்களுக்காக கொண்டு வரப்படும் காவிரி குடிநீர் ஆனது குழாயில் உடைப்பு ஏற்பட்டு தொடர்ந்து கடலில் விழுந்து வீணாகும் அவலம் தான் அதிகமாகவே நடந்து வருகின்றது.
நேற்று கூட பாம்பன்ரோடு பாலத்தின் நடைபாதையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு காவிரி நீரானது ரோடு பாலத்தின் தடுப்பு சுவர் தூண்கள் இடைவெளி வழியாக கடலுக்குள் பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீணாக விழுந்து கொண்டிருந்தது. கடலுக்குள் வீணாக அருவி போல் விழுந்து கொண்டிருந்த குடிநீரை சுற்றுலா பயணிகள் மிகுந்த வேதனையோடு பார்த்து சென்றனர்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஆகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்லாண்டு காலமாக இருந்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதோடு பாம்பன் ரோடு பாலத்தில் தொடர்ந்து குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதும் அதிகமாகவே நடந்து வருகின்றது. இதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்