2 அரசு பஸ் கண்ணாடிகளை உடைத்து திருநங்கைகள் ரகளை
கரூரில் 2 அரசு பஸ் கண்ணாடிகளை உடைத்து திருநங்கைகள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
திருநங்கை வாக்குவாதம்
கரூர் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி செல்வதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு அரசு பஸ் ஒன்று தயாராக நின்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் ஏறிய திருநங்கை ஒருவர் பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகளிடம் யாசகம் (காசு) கேட்டு கொண்டிருந்தார். இதனையடுத்து நீண்ட நேரம் ஆகியும் அவர் பஸ்சை விட்டு இறங்கவில்லை என தெரிகிறது. இதனால் டிரைவர் மற்றும் கண்டக்டர் பஸ் புறப்படும் நேரம் ஆகிவிட்டதால் அவரை கீழே இறங்கும்படி கூறியுள்ளனர். அப்போதும் அந்த திருநங்கை பஸ்சில் இருந்து இறங்காமல் டிரைவர் மற்றும் கண்டக்டரை திட்டியுள்ளார்.
இதனையடுத்து பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகள் கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு ஆதரவாக திருநங்கையை திட்டி இறங்கும்படி கூறியுள்ளனர். இதனையடுத்து பதிலுக்கு திருநங்கையும் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பஸ் கண்ணாடிகள் உடைப்பு
இந்தநிலையில் அந்த திருநங்கை செல்போன் மூலம் தனக்கு தெரிந்தவர்களுக்கு தகவல் கூறியுள்ளார். இதனையடுத்து 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பஸ் நிலையத்தில் குவிந்து அந்த பஸ்சின் பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளை ஆபாசமாக பேசி திட்டியுள்ளனர். மேலும் அந்த பஸ் மற்றும் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு பஸ்களின் முன் பக்க கண்ணாடிகளை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கரூர் டவுன் போலீசார் பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் கரூர் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் 8-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.