கதண்டுகள் கடித்து 6 பேர் வாந்தி-மயக்கம்
நச்சலூர் அருகே கதண்டுகள் கடித்து 6 பேர் வாந்தி-மயக்கம் அடைந்தனர். இதையடுத்து அவர்களுக் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நச்சலூர்,
குப்பை சுத்தம் செய்யும் பணி
கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள நங்கவரம் பேரூராட்சி குழுமிக்கரை பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 67), விவசாயி. இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு மற்றும் களத்தில் உள்ள செடி, கொடி மற்றும் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் நேற்று காலையில் ஈடுபட்டனர். பின்னர் குப்பைகளை தீ வைத்து எரித்து கொண்டு இருந்த போது திடீரென கதண்டுகள் கூட்டம் மளமளவேன அப்பகுதியை சுற்றி வளைத்தது.
6 பேர் வாந்தி-மயக்கம்
அப்போது சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்ட முத்துசாமி, அவரது மனைவி லெட்சுமி (58), மகன் சதீஸ் என்கிற பெரியசாமி (37), ராஜகோபால் மனைவி தனம் (60), களத்து வீட்டில் வசித்து வந்த பழனியாண்டி மனைவி செம்பாயி (75), தமிழ்சோலை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் பொன்னர் (57) ஆகிய 6 பேரையும் துரத்தி, துரத்தி கடித்துள்ளது.
இதில் 6 பேருக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் தீப்பந்தம் மூட்டி கதண்டுகளை விரட்டியடுத்தும் விடாமல் கதண்டுகள் உடம்பு முழுவதும் சூழ்ந்து கடித்துள்ளது.
தீவிர சிகிச்சை
தகவல் அறிந்து வந்த நங்கவரம் வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி, நங்கவரம் பேரூராட்சி செயல் அலுவலர் வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதையடுத்து 6 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது