தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம், குருவம்பட்டியில் இருந்து சித்தாம்பூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதினால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து புதிதாக தார் சாலை அமைத்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
பழனிசாமி, சித்தாம்பூர், திருச்சி.
ஆபத்தான மின்கம்பிகள்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ஆங்கரை கிராமத்தில் சாலையோரத்தில் செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதினால் அதன்மீது வாகனங்கள் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மின்கம்பிகள் மிகவும் கீழே தொங்குவதினால் கயிற்றின் மூலம் கட்டி இழுத்து அருகில் உள்ள மரத்தில் கட்டி வைக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது அந்தக்கயிறு அறுந்து மின்கம்பிகள் கீழே இறங்கினால் வாகனங்கள் மீது பட்டு உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
சவுந்தரராஜன், ஆங்கரை, திருச்சி.
ஓடாத மின் விசிறிகள்
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில்விசாரணை கவுண்டர் மற்றும் நுழைவு வாயில் பகுதியில் 4 தூண்களில் மின்விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின் விசிறிகள் ஓடாத காரணத்தால் தற்போது வெயிலின் புழுக்கத்தில் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கண்ணன், திருச்சி.