கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கொன்ற மனைவி கைது

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கொன்ற மனைவி கைது

Update: 2022-05-12 17:13 GMT
பல்லடம்
பல்லடம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை  படுகொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
மனைவி கைது 
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் கோபால் வயது 35. பனியன் நிறுவன தொழிலாளி. இவர் தனது மனைவி சுசீலா 30 மற்றும் 10 வயது மகள்,  7 வயது மகனுடன்  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரான் காலனியில் வசித்து வந்தார்.  இவர் கடந்த  4ந் தேதி சின்னக்கரை லட்சுமிநகர் பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த கொலை தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சுசீலாவின் கள்ளக்காதலுக்கு கோபால் இடையூறாக இருந்ததால் கூலிப்படையை ஏவி கோபாலை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சுசீலாவின் கள்ளக்காதலனான பனியன் நிறுவன மேலாளர் மாரீஸ்வரன் மற்றும் விஜய், மதன்குமார், மணிகண்டன், லோகேஸ்வரன், வினோத் ஆகிய  6 பேரை போலீசார் கைது செய்தனர்.  தலைமறைவாக இருந்த சுசீலாவை  போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான சுசீலா போலீசில் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:
 கொடைக்கானலை சேர்ந்த கோபாலுக்கும் எனக்கும் திருமணம் நடைபெற்றது. கொடைக்கானலில்  சரியான வேலை வாய்ப்பு இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளுக்கும்  மேலாக பல்லடம் அருகே அருள்புரம் செந்தூரான் காலனியில் வசித்துக் கொண்டு எனது கணவர் கோபால் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் குழந்தைகள் இருவரும் வளர்ந்து விட்டதால் எனக்கு வீட்டில் சும்மா இருந்ததால் போர் அடிப்பதாக கூறி அருகே உள்ள பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றேன். அந்த பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த தேனியைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. 
உல்லாசம்
 அதன்பின்னர் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். அடிக்கடி நானும், மாரீஸ்வரனும் உல்லாசபுரியில் சிறகடித்து பறந்தோம். அவருடன் தேனுண்ட வண்டுபோல் என்மீது மயங்கி கிடந்தார். அது மட்டுமல்ல என்னவர் மாரீஸ்வரன், எனது கணவரை விட வயதில் சிறியவராக இருந்ததாலும், கேட்டபோது துணிகள், பணம் தந்ததாலும் அவர்  மீது எனக்கு தீராத காதல் உண்டானது. இதற்கிடையே என்னுடன் வந்து விடு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என மாரீஸ்வரன் அடிக்கடி வற்புறுத்தினார்.  அவரின் அழைப்பு என்னை சொர்க்கபுரியில் உள்ள வசந்த மண்டபத்திற்கு  அழைப்பது போல் இருந்தது. இதற்கு எனது கணவர் கோபால்  இடையூறாக இருப்பதாக உணர்ந்தேன்.  அவரை தீர்த்துக் கட்டி விட்டால், இருவரும் சந்தோசமாக வாழலாம் என இருவரும் திட்டமிட்டோம்.
 இதையடுத்து மாரீஸ்வரன் அவருடன் பணிபுரியும் நண்பர்களிடம் கூறி கோபாலை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி கடந்த கடந்த  4ந் தேதி எனது  கணவருக்கு போன் செய்து குழந்தைகளுக்கு துணி எடுக்க திருப்பூர் சென்று வரலாம் என்றும், இரவு 8 மணிக்கு வாருங்கள் என்று கூறினேன். இது அவருக்கு நான் அழைத்த இறுதி அழைப்பு என்று தெரியவில்லை.  இதனை நம்பிய அவரும் இரவு 8 மணிக்கு வந்து விடுகிறேன் என  பனியன் நிறுவனத்தில் இருந்து புறப்பட்டார். கோபால் புறப்பட்டதை மாரீஸ்வரனிடம் கூறினேன். அவர் நண்பர்கள் மற்றும் கூலிப்படையுடன் சேர்ந்து லட்சுமி நகர் பகுதியில் வந்த கோபாலை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்தனர். நான் சம்பவ இடத்திற்குச் சென்று யாருக்கும் சந்தேகம் வராதபடி கணவரின் உடலை பார்த்து கதறி அழுதேன். பின்னர் கொடைக்கானலுக்கு சென்று மறைந்து இருந்தேன். இந்த நிலையில் நேற்று பல்லடம் வந்தபோது போலீசார் என்னை கைது செய்தனர்.
இவ்வாறு விசாரணையில் அவர் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

மேலும் செய்திகள்