திருவீழிமிழலை வீழிநாதசாமி கோவில் தேரோட்டம்
திருவீழிமிழலை வீழிநாதசாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
குடவாசல்:-
திருவீழிமிழலை வீழிநாதசாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
வீழிநாதசாமி கோவில்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருவீழிமிழலையில் சுந்தர குசாம்பிகை சமேத வீழிநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினசரி சாமி-அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது. விழாவில் கடந்த 9-ந் தேதி கார்த்தியாயினி சமேத மாப்பிள்ளை சாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் 9-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.
இதில் 50 அடி உயரம், 20 அடி அகலம் கொண்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் குசாம்பிகை சமேத வீழிநாதசாமி எழுந்தருளினார். இதையடுத்து தேரோட்டத்தை திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வடம்பிடித்து தொடங்கி வைத்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
சரண கோஷம்
அப்போது பக்தர்கள் ‘சிவாய நம, சிவாய நம, வீழிநாதா, வீழி நாதா’ என சரண கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். தேர் 4 வீதிகளிலும் வலம் வந்து மதியம் 12 மணி அளவில் நிலையை அடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
அதேபோல் அரசு விதிமுறைகளின்படி வருவாய்த்துறை, போலீஸ் துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்களும் தேவையான முன்னேற்பாடுகளை செய்து இருந்தனர்.