சிவமொக்காவில் கணவரை தாக்கி பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி

சிவமொக்காவில் கணவரை தாக்கி, தலித் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-05-12 16:34 GMT

சிவமொக்கா:

சிகிச்சைக்காக...

  சிவமொக்கா மாவட்டம் அரகா கிராமத்தை சேர்ந்த தலித் பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அந்த பெண் தனது கணவருடம் சிகிச்சைக்காக தீர்த்தஹள்ளி பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார். 

பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து வழி மறித்தது. அப்போது அந்த தம்பதியிடம் அந்த கும்பல் வாக்குவாதம் செய்தது.
  இதையடுத்து அந்த கும்பல் பெண்ணின் கணவரை கடுமையாக தாக்கியது.

 இதில் அவர் நிலைதடுமாறி கீேழ விழுந்தார். இதில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. பின்னர், அவர்கள் அந்த பெண்ணை தாக்கி, கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் மர்ம கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது.

போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

  இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தம்பதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு தீர்த்தஹள்ளி போலீசார் வந்து பார்வையிட்டனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பெண்ணின் கணவருக்கும், மர்ம கும்பலுக்கும் இடையே முன்விரோதம் ஏதும் உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.

  இந்த நிலையில் சிவமொக்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரசாத் அந்த புகார் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
  கணவர் கண் முன்னே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மர்மநபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்