சார்பதிவாளர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை
தூத்துக்குடி அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, செந்திலாம்பண்ணை, கிராமத்தில் 500 விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலத்தை மோசடியாக தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பா.ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் சசிகலாபுஷ்பா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தூத்துக்குடி அருகிலுள்ள புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். தொடர்ந்து விவசாயிகளின் நிலங்களை அவர்களுக்கே பத்திரப்பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தினர். தொடர்ந்து சார்பதிவாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து பா.ஜனதா மாநில துணைத்தலைவர் சசிகலாபுஷ்பா கூறும் போது, சார் பதிவாளர் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக கூறி உள்ளார். தமிழகத்தில் எங்கு முறைகேடு நடந்தாலும் மாநில தலைவர் அண்ணாமலை அனுமதியோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக பா.ஜனதா கட்சி தொடர்ந்து போராடும். கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும், என்று கூறினார்.